புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு பிரதமரினால் திறந்து வைப்பு

இலங்கை தேசிய வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடம் பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இலவச சுகாதார சேவையின் சிறந்த பிரதிபலன்களை இலங்கை வாழ் மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் உன்னதமான நோக்கத்தில் ஈ.ஏ.எம். மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் பூரண நிதி நன்கொடையின் கீழ் இந்த மூன்று மாடிக் கட்டிடம் நிறுவப்பட்டுள்ளது.

சுமார் 300 மில்லியன் ரூபாய் செலவில் 13 கட்டில்களைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவை உள்ளடக்கியதாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய சிறுநீரக சத்திர சிகிச்சையியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவு கட்டிடத்தின் நினைவு பலகை பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி நன்கொடை வழங்கிய ஈ.ஏ.எம். மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீம் அவர்களுடன் பிரதமர் நட்பு ரீதியாகக் கலந்துரையாடினார்.

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் எஸ்.எச்.முணசிங்க, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, தேசிய வைத்தியசாலையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டபிள்யூ.கே.விக்ரமசிங்க, ஈ.ஏ.எம். மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத்தின் தலைவர் இல்யாஸ் அப்துல் கரீம் உள்ளிட்ட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Author: GOKUL KURU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *